2024-07-03

A report on Sona FM 107.8 by G.Priyanga

சோனா சமுதாய வானொலி

முன்னுரை :

இன்று என்னதான் தொலைக்காட்சி (டிவி), கைபேசி (செல்போன்) ஆக்கிரமிப்பில் நாம் மூழ்கி இருந்தாலும் வானொலி கேட்பது என்பது ஒரு அலாதி சுகம்தான். அதை இன்றைய தாத்தா பாட்டிகளிடம் (பெரியவர்களிடம்) கேட்டால் தெரியும். அவர்களது இளமைப்பருவம் வானொலி ஒலிபரப்புகளால் நிரம்பி இருந்ததை கதை கதையாக சொல்லுவார்கள். இப்படி நாட்டில் நிகழ்கிற ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வையும் செய்திகளின் வழியே தெரியப்படுத்துகிற வானொலியின் பங்கு அவர்களது வாழ்வில் பின்னிப்பிணைந்திருந்தது என்றால் அது மிகையல்ல.

வானொலியும் மார்க்கோனியும் :

தகவல் தொடர்பு வரலாற்றில் ஒரு மைல் கல்லாக வானொலியை கண்டுபிடித்தவர் மார்க்கோனி. 1922 ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. ஒலி அலைகளை பரப்புவதில் பல சோதனைகளுக்கு பின் சாதனை படைத்த மார்கோனிக்கு 1909ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனால் தான் மார்கோனி 'வானொலியின் தந்தை' என அழைக்கப்படுகிறார். வானொலியில் செய்திகளையும், திரைப்பட பாடல்களையும் கேட்கும் ரசிகர் கூட்டம் இன்று குறைந்துள்ளது உண்மைதான். ஆனாலும் இன்றைய கைபேசியில் வானொலி தனக்கான ஒரு இடத்தையும் தக்கவைத்துள்ளது.

வானொலி :

வானொலி (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும். மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான்வழியே செலுத்தி ஆங்காங்கே மக்கள் அதை தங்களிடமுள்ள வானொலிப் பெட்டி வழியாகப் பெறுமாறு தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை, வானொலி (radio) என்பர். இந்த மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒலியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது. ஒலி அலைகளுடன் மின்காந்த அலைகளைக் கலந்து வானொலி நிலையங்களுக்கும் மிக உயரமான கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள அனுப்பும் கருவிகள் மூலம் வான்வெளியில் மின்காந்த அலைகளாக ஒலிபரப்பப்படுகின்றது. இப்படி ஒலிபரப்பப்பட்ட மின்காந்த அலைகளைப் பயனர்கள் தங்களிடம் உள்ள வானொலிப் பெட்டிகள் மூலம் கேட்டு மகிழ்கிறார்கள். வானொலிப் பெட்டிகள், வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட மின் காந்த அலைகளை உள்வாங்கி, அதன் வழியாக கலந்திருக்கும், ஒலிஅலைகளை மட்டும் பிரித்தெடுத்து ஒலிபரப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

வானொலி ஒலிபரப்பின் முக்கியத்துவம் :

  1. தொலைக்காட்சி அல்லது அச்சு ஊடகம் போன்ற பிற சேவைகளுடன் ஒப்பிடுகையில் செலவு குறைவு.
  2. வானொலிகள் பரவலாகக் கிடைக்கின்றன, மற்றும் மலிவு விலையில் உள்ளன.
  3. வானொலிகள் அவசரநிலை அல்லது முக்கிய செய்தி நிகழ்வுகளின் போது உடனடி அறிவிப்புகளை வழங்கும். உண்மையான நேரத்தில் செய்திகளையும் தகவலையும் வழங்க முடியும்.
  4. வானொலி நிலையங்கள் உள்ளூர் சமூகங்களுக்கு சேவை செய்ய முடியும் மற்றும் பிராந்திய நலன்கள் மற்றும் மொழிகளுக்கு ஏற்ப உள்ளடக்கத்தை வழங்க முடியும்.
  5. வானொலி பார்வையாளர்களின் கற்பனையை ஈடுபடுத்துகிறது, இது கேட்போர் கதைகள், கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகளை ஒலிக்குறிப்புகளின் அடிப்படையில் மட்டுமே காட்சிப்படுத்த அனுமதிக்கிறது.
  6. வானொலிகள் கையடக்கமானவை.
  7. வானொலி கேட்பவர்களுக்கு புதிய இசை மற்றும் கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறது.
  8. பயனர்களுக்கு விளம்பரங்களை வழங்க வானொலி உதவுகிறது. வானொலி விளம்பரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இது விளம்பர நிறுவனங்களுக்கு வருவாயை அதிகரிக்க உதவும்.
  9. வானொலி நீண்ட வரலாறு மற்றும் ஊடகங்களில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.

வானொலியின் வகைகள் :

வானொலி மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவை,

  1. பொது வானொலி (Public radio)
  2. வர்த்தக ரீதியிலான வணிக வானொலி அல்லது தனியார் வானொலி (Commercial radio)
  3. சமுதாய வானொலி (Community radio)

பொது வானொலி (Public radio) :

அகில இந்திய வானொலி (AIR) என்பது இந்தியாவில் ஒரு தேசிய பொது வானொலி ஒலிபரப்பு ஆகும். இது இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி பொது சேவை ஒலிபரப்பாளரான பிரச்சார் பாரதியால் இயக்கப்படுகிறது. (AIR) 1930 இல் நிறுவப்பட்டது மற்றும் இது உலகின் மிகப்பெரிய வானொலி இணையதளத்தில் ஒன்றாகும். நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் அமைந்துள்ளன. இது செய்திகள், இசை, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி உள்ளடக்கம் உட்பட பலவிதமான நிரலாக்கங்களை பல்வேறு மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளில் ஒலிபரப்புகிறது. நிகழ்ச்சிகள் AM மற்றும் FM ரேடியோ, குறுகிய அலை ஒலிபரப்பு மற்றும் தொழில்நுட்ப தளங்கள் உட்பட பல்வேறு தளங்களில் கிடைக்கின்றன. இந்திய கலாச்சாரம் மற்றும் மதிப்புகளை  மேம்படுத்துவதிலும், பொது மக்களுக்கு தகவல் மற்றும் கல்வி வழங்குவதிலும் AIR முக்கிய பங்கு வகிக்கிறது.

வர்த்தக ரீதியிலான வணிக வானொலி அல்லது தனியார் வானொலி(Commercial radio) :

வணிக வானொலி என்பது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் விளம்பர வருவாயின் மூலம் நிதியளிக்கப்படுகிறது. இது பொது வானொலிக்கு எதிராக அரசு நிதியளிக்கிறது. இது 1920 களில் அமெரிக்காவில் உருவானது மற்றும் அதன் வருமானத்தின் பெரும்பகுதிக்கு விளம்பரத்தை நம்பியுள்ளது.

சமுதாய வானொலி (community radio) :

சமுதாய வானொலி ஏறத்தாழ 22 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டதாக கண்டறியப்படுகிறது. இந்திய சமுதாய வானொலியின் தந்தை ஸ்ரீதர் ராமமூர்த்தி ஆவார். தமிழ்நாட்டில் சோனா வானொலி போல எண்ணற்ற சமூக வானொலிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கத்திற்க்காக நடத்தப்பட்டாலும் அவற்றின் நோக்கம் சமூகங்களை இணைப்பதாக உள்ளன. அந்த வகையில் தனியார் வானொலிகளுடன் ஒப்பிட முடியாதபோதும் தங்களுக்கு உட்பட்ட தொலைத்தொடர்பு வரம்பில் ஒப்பற்ற சேவையை இந்த சமுதாய வானொலிகள் வழங்கி வருகின்றன. தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், வேளாண் அறிவியல் மைய அமைப்புகள் மற்றும், லாப நோக்கற்ற பிற அமைப்புகள் இந்தியாவில் சமுதாய வானொலிகள் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இப்போது இந்தியாவில் சராசரியாக 290 சமுதாய வானொலி நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன எனக் கூறப்படுகிறது. சமூகம் என்று பார்த்தால் கல்வி, ஆளுமை, மருத்துவம், சுற்றுச்சூழல், இசை, குழந்தைகளுக்கு என்றும், வேளாண்மைக்கு என வரும்போது, விவசாயிகளின் வெற்றிக்கதைகள், வேளாண் விஞ்ஞானிகள் பேட்டி, புதிய தொழில்நுட்பங்கள், விவசாயிகள் கேள்வி-பதில், வேளாண் மாணவர்கள் கேள்வி பதில் கலந்துரையாடல் என ஒலிபரப்பப்படுகிறது. வேளாண்மை தொடர்பான நவீன கண்டுபிடிப்புகளைப் பற்றி விவசாயிகளுக்குத் தெரிவிப்பதற்காக விவசாயிகளுக்கான சமுதாய வானொலி (community radio) ஒன்றை கேரள மாநில அரசு துவங்கியதாகவும் ஒரு தகவல் உண்டு. நாட்டில் மாநில அரசினுடைய தொடக்கத்தின் கீழ் விவசாய சமுதாயத்தோடு இணைந்திடக் கூடிய முதல் சமுதாய வானொலி இதுவே ஆகும். கேரள மாநிலத்தின் மாநில வேளாண் துறையின் வேளாண் தகவல் பணியகத்தின் (Farm Information Bureau - FIB) கீழ் இந்த சமுதாய வானொலி தொடங்கப்பட்டதாக ஒரு செய்தியும் உண்டு. கேரள மாநிலத்தின் முதல் வேளாண் வானொலியானது ஒரு காலத்தில் “கேரளாவின் அரிசிக் கிண்ணம்” (Rice bowl of Kerala) என்றழைக்கப்பட்ட ஆலப்புழா  மாவட்டத்தில் உள்ள குட்டநாட்டிலிருந்து தன் முதல் ஒலிபரப்பை தொடங்கியதாக கூறப்படுகிறது.

சோனா சமுதாய வானொலி :

சோனா சமுதாய வானொலி என்பது, சமுதாயத்தின் குரலாக நம் மொழியில் நம்பிக்கைக்குரிய தகவல்களை அறிந்து கொள்வதற்கான வாழ்வியலின் பிரதிபலிப்பு  ஆகும். சோனா சமுதாய வானொலி 21 நவம்பர் 2022 ஆம் ஆண்டு தனது அதிகாரப்பூர்வ ஒலிபரப்பை தொடங்கியது. வள்ளியப்பா அறக்கட்டளையால் சோனா வானொலி நிலையம் நடத்தப்பட்டு வருகிறது. மின் கோபுரம் ஒருபுறமும் வானொலி நிலையம் மற்றொரு புறமும் அமைந்த முதல் வானொலி சோனா சமுதாய வானொலி ஆகும். மின்கோபுரம் சேர்வராயன் மலைப்பகுதியிலும், வானொலி நிலையம் மாமாங்கத்திலும் அமைந்து இணையதளம் வாயிலான ஒலிபரப்பை கொடுத்து வருகிறது.  திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒலிபரப்புகிறார்கள் . மதியம் 2:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை மறுஒலிபரப்பு செய்யப்படுகிறது. இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை அந்த வாரத்தில் ஒலிபரப்பப்பட்ட சிறந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் 2 நிகழ்ச்சிகள் மறுஒலிபரப்பு செய்கிறார்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை நேரடி ஒலிபரப்பு  செய்கிறார்கள். பகல் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மறு ஒலிபரப்பு நடைபெறும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை 2 சிறப்பு நிகழ்ச்சிகளை நேரடி ஒலிபரப்பு செய்கிறார்கள். சோனா சமுதாய வானொலியில் RJ என அழைப்பதில்லை. மாறாக, தொகுப்பாளர் (presenter) என அழைக்கிறார்கள். அலைபேசி வாயிலாகவும் நேரடி அலைபேசி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் whatsapp தொடர்பு மூலமாகவும் சமுதாய மக்களுடன் உரையாடுதல் மூலமாகவும் சமுதாயத்தின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து கொண்டு அவற்றிற்காக நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப முடிகிறது.

சமுதாய வானொலியின் ஒலிபரப்பு விதிமுறைகள் :

  • சாதி, மதம் சார்ந்த கருத்துக்களை ஒலிபரப்புவதில்லை. மற்றவர்களை உருவ கேலி செய்யக்கூடிய நிகழ்வுகளை ஒலிபரப்புவதில்லை.
  • ஒலிபரப்பப்படும் பாடல்கள் அனைத்தும் அனைத்து மதங்களையும் சார்ந்த பாடல்களாக ஒலிபரப்பப்படுகின்றன.
  • ஒருவரை திட்டுவது போன்ற சொற்கள் பேசுவதில்லை.
  • யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பது சாலச் சிறந்தது.
  • செய்தி' அல்லது 'நியூஸ்' என்ற சொற்களை பயன்படுத்தக் கூடாது  மற்றும் செய்திகளை ஒலிபரப்பக் கூடாது.
  • அரசு சட்டங்களையும், அரசு கொள்கைகளையும் கேலிப் பேசுதல் கூடாது.
  • அரசியல் சார்ந்த செய்திகளை பகிர்தல் கூடாது.
  • அரசியலையோ அரசியல் சார்ந்தவர்களையோ கேலி பேசுதல் கூடாது.
  • தனிப்பட்ட நிறுவனங்களை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசக்கூடாது.
  • பரபரப்பு தகவல்கள் அதாவது கொலை, கொள்ளை போன்ற தகவல்களை பகிரக்கூடாது.
  • ஒலிபரப்பப்படும் ஒவ்வொரு தகவலுக்கும் உரிய ஆதாரங்களை வைத்துக்கொண்டு தகவலை வெளியிட வேண்டும்.
  • நேரடி ஒலிபரப்பில் பேசும்பொழுது சமுதாயம் சார்ந்த வட்டார வழக்கு தமிழை பயன்படுத்தி பேச வேண்டும்.
  • நேரடி ஒலிபரப்பில் செல்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு  பேசும் மக்கள் சொல்லும் தகவல் ஏதாவது சர்ச்சைக்குரியதாக இருந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும்.

சோனா சமுதாய வானொலியின் சிறப்பு அடையாளங்கள் :

ஒவ்வொரு குறிப்பிட்ட வானொலியும் தனக்கென தனித்த அடையாளங்களையும் தனித்த நோக்கத்தையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சோனா சமுதாய வானொலியின் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்கள்.

கிராமங்களில் நேரடியாக மக்களை சந்தித்தல் :

  • சோனா சமுதாய வானொலியினர் நேரடியாக சமுதாயத்தில் இருக்கக்கூடிய மக்களை சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை ஒலிப்பதிவு செய்கின்றனர்.
  • சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய 75%க்கும் அதிகமான கிராமங்களில் சோனா சமுதாய பண்பலையை அறிமுகப்படுத்தி தொடர்ந்து அவர்களுடன் பயணித்து வருகின்றனர்.
  • சோனா சமுதாய வானொலியின் முதல் வெற்றியாக நேரடியாக மக்களை சமுதாயத்தில் சென்று சந்தித்தலை கொண்டுள்ளனர்.
  • சோனா சமுதாய வானொலியை நேரடியாக அணுகி தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்களாக சமுதாய மக்கள் உள்ளனர்.
  • சோனா சமுதாய வானொலியின் ஸ்டுடியோவை பயன்படுத்தி சுதந்திர கலைஞர்களின் பாடல்களும், நாட்டுப்புற பாடல்களும் பல ஒலிப்பதிவு செய்யப்பட்டு இன்றளவும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

சுதந்திர கலைஞர்களுக்கான மிகப்பெரிய வாய்ப்புகள் :

  • சோனா சமுதாய வானொலியில் சினிமா பாடல்களை தவிர்த்து நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் சுதந்திர கலைஞர்களின் (independence artist) பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
  • ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் ஹிந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய பாடல்களுடன் நிகழ்ச்சிகளை தொடங்குகின்றனர்.
  • சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுதந்திர கலைஞர்கள் மட்டுமன்றி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுதந்திர கலைஞர்களின் பாடல்களையும் ஒலிபரப்பு செய்து வருகின்றனர்.
  • சுதந்திர கலைஞர்களின் பாடலுக்கு அடையாளம் தரக்கூடிய ஒரு வானொலியாக சோனா FM 107.8 நம்ப மக்களின் குரல் சமுதாய வானொலி செயல்பட்டு வருகிறது.

தினந்தோறும் நேயர்களுடன் அலைபேசி வழி உரையாடல்கள் :

  • திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 1 மணி முதல் 2 மணி வரை ட்ரிங் ட்ரிங் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
  • இந்த நிகழ்ச்சியில் நாள்தோறும் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்வதற்குரிய பங்கு பெறுவதற்குரிய தலைப்புகள் கொடுக்கப்பட்டு ஒரு மணி நேரம் நேயர்களுடன் கலந்துரையாடும் அலைப்பேசி வழி உரையாடல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
  • நேயர்களுடனான அலைபேசி வழி உரையாடல் நிகழ்ச்சி இது.
  • சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 11 மணி முதல் முற்பகல் 12 மணி வரை இந்த “ட்ரிங் ட்ரிங்” நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
  • புதிய நேயர்களை கண்டறிிதற்கான நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி உள்ளது.
  • தினந்தோறும் நேயர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வரக்கூடிய ஒரு சிறப்பு நிகழ்ச்சி “ட்ரிங் ட்ரிங்”.

ஏற்காடும் சோனா சமுதாய வானொலியும் :

  • சோனா சமுதாய வானொலியின் மின் கோபுரம் சேர்வராயன் மலை குன்றுகளில் ஏற்காட்டில் அமைந்துள்ளது.
  • ஏற்காட்டில் வாழக்கூடிய மலைவாழ் மக்களுக்கு தேவையான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒலிபரப்ப திட்டமிட்டு வருகின்றனர்.
  • மக்களுடைய குரல்களில் குறிப்பாக ஏற்காடுவாழ் மக்களின் குரல்கள் தொடர்ந்து சோனா சமுதாய வானொலியில் ஒலித்து வருகின்றன.
  • வானொலி ஒலிபரப்பு சென்றடையாத ஏற்காட்டின் மலைக் கிராமங்களிலும் சோனா சமுதாய வானொலியின் பணியாளர்கள் நேரடியாக சென்று அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடி அவ்வுரையை வானொலியில் ஒலிபரப்பி வருகின்றனர்.

மற்ற மாவட்ட நேயர்கள் :

  • ஒலிபரப்பு எல்லை சேலம் மாவட்டமாக இருந்தாலும் மற்ற மாவட்டங்களில் இருந்து சோனா வானொலியை செயலி மூலம் (app) கேட்டுக் கொண்டிருக்க கூடிய நேயர்களுக்கு நேரடி அலைபேசி நிகழ்ச்சிகளில் பேசுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
  • அலைபேசி மூலமாகவும், புலனம் மூலமாகவும் நேயர்கள் அவர்களது கருத்துக்களை சோனா வானொலிக்கு தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருப்பதால் சோனா வானொலி அதிக அளவில் மக்களை சென்றடைந்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

சோனா வானொலியின் சிறப்பு நிகழ்ச்சிகள் :

  1. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 மணி முதல்11:00 மணி வரை மை டியர் மக்களே நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது.
  2. சோனா சமுதாய வானொலியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன.
  3. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 6:00 மணி முதல் 8:00 மணி வரை  2 மணி நேர சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன.

திங்கட்கிழமை 11:00 மணிக்கு முத்தமிழ் திங்கள் :

  • முதல் 10 நிமிடங்கள் தமிழ் பற்றிய சிறப்பு தொகுப்பு.
  • கதை கதையாய் கதைப்போமா?.
  • நாள்தோறும் நாலடியார்.
  • தமிழ் சொல் அறிவோம்.
  • தமிழுடன் விளையாடு.

செவ்வாய்க்கிழமை 11:00 மணிக்கு மகளிர் மனம் :

  • முதல் 10 நிமிடம் மகளிர் மனம் பற்றிய சிறப்பு தொகுப்பு.
  • காரிகையின் கனவு.
  • லேசா லேசா.
  • மகளிர்.com.
  • நலமுடன் நங்கை.

புதன்கிழமை 11:00 மணிக்கு ஊரைச் சுற்றி ஒரு உலா :

  • மறக்க முடியுமா?.
  • ஊர் நிலவரம்.
  • ஊரத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன்.
  • ஊரான ஊருக்குள்ள.

வியாழக்கிழமை 11:00 மணிக்கு விவசாய வியாழன் :

  • முதல் 10 நிமிடம் விவசாய வியாழன் பற்றிய சிறப்பு தொகுப்பு.
  • உணவும் உற்பத்தியும்.
  • வாழ்வின் தொடக்கம் விவசாயம்.
  • வேளாண் திட்டங்கள்.
  • உழவும் உலகமும்.

வெள்ளிக்கிழமை 11:00 மணிக்கு ஆரோக்கியமும் நல்வாழ்வும் :

  • முதல் 10 நிமிடம் ஆரோக்கியமும் நல்வாழ்வும் பற்றிய சிறப்பு தொகுப்பு.
  • நலம் சார்ந்த உங்கள் பார்வை.
  • ஓ மனமே.
  • உற்சாகமான உணவு இடைவேளை.
  • வணக்கம் டாக்டர்.

சனிக்கிழமை 6:00 மணிக்கு இது நம்ம சேலம் :

  • நகைச்சுவை சிறப்புத் தொகுப்பு.
  • உங்கள் குரல்.
  • நம்ம ஊரப் பத்தி.

சனிக்கிழமை 7:00 மணிக்கு கனவுத் திரை உலகம் :

  • பதில் சொல்லுங்க பாஸ்.
  • ஒரு கதை சொல்லட்டா சார்.
  • கொட்டி கிடக்கும் சினிமா.
  • நானும் சினிமாவும்.

ஞாயிற்றுக்கிழமை 6:00 மணிக்கு இளமை எனும் பூங்காற்று :

  • இங்க என்ன சொல்லுது.
  • ஜாப் ஜங்ஷன்.
  • உள்ளூர் விளையாட்டுக்கள்.
  • வாங்க பேசலாம்.

ஞாயிற்றுக்கிழமை 7:00 மணிக்கு டாப் 10 மியூசிக் :

  • வாரந்தோறும் ஒலிபரப்பப்பட்ட பாடல்களை வாக்கெடுப்பின்படி சிறந்த 10 பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்புவார்கள்.

பத்து நிமிட சிறப்பு தொகுப்புகள் :

 1. சேலத்தின் முகங்கள்.

  • சேலம் மாவட்டத்தில் உள்ள மக்களை நேர்காணல் (interview) செய்து அந்த நிகழ்ச்சியை வெளியிடுவார்கள்.

 2. மூத்தோர் சொல் அமிழ்தம்.

  • தாத்தா பாட்டி போன்ற பெரியவர்களிடம் நேரில் சென்று  அவர்களுடைய அனுபவங்களை கேட்டு அறிந்து அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் உள்ள வேறுபாட்டை மூத்தோரின் குரலில் ஒலிபரப்புகிறார்கள்.

3. கவிதை நேரம்.

  • கவிதை வாசிப்பாளர்களும் கவிஞர்களும் சொல்லும் கவிதைகளை இங்கு தொகுத்து ஒலிபரப்புகின்றனர்.

4. புத்தக புதன்.

  • இதழ்கள் மற்றும் எழுத்தாளர்கள் எழுதும் சிறந்த புத்தகங்களின் தொகுப்புகளை இங்கு தொகுத்து ஒலிபரப்புகின்றனர்.

 5. அன்புடன் ஆடவர்.

  • ஆண்களுடைய ஆசைகள் அவர்களுடைய கனவுகள் சந்திக்கக்கூடிய சவால்களை பற்றி அவரவர் வாழ்க்கை கதைகளை அவரவர்களின் குரல் வாயிலாகவே ஒலிபரப்பும் சிறப்பு நிகழ்ச்சி.

 6. சட்டம் அறிவோம்.

  • மக்கள் அறிய வேண்டிய அடிப்படை சட்டங்கள் குறித்த தகவல்களை அஙகீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் இங்கு தொகுத்து வழங்குகின்றனர்.

 7. குழந்தைகளின் அமுதமொழி.

  • குழந்தைகள் பாடும் பாடல்கள் மற்றும் அந்தக் குழந்தைகளுடைய பிஞ்சுக்குரல்கள்  அனைத்தும் ஒலிபரப்பப்படுகின்றன.

 8. அறிந்த இடமும் அறியாத தகவலும்.

  • சேலத்தில் உள்ள இடங்கள் பற்றியும் அந்த இடத்தில் உள்ள முக்கிய வரலாற்றுத் தகவல்கள் பற்றியும் இங்கு தொகுத்து வழங்குகின்றனர்.

 9. வழிபாட்டுத் தலங்களின் வரலாறு.

  • கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் ஆகிய இடங்களுக்குச் சென்று அவற்றின் வரலாறை இங்கு தொகுத்து வழங்குகின்றனர்.

முடிவுரை :

வானொலி பழங்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக இருந்தாலும்  பல காலங்களை தாண்டியும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சோனா சமுதாய வானொலி மக்களுடைய குரல்களை ஒலிபரப்புவதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சமுதாயத்தில் வாழ்கின்ற மக்களின் அன்றாட வாழ்க்கையில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் சமுதாயத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது சோனா FM 107.8 நம்ம மக்களின் குரல் சமுதாய வானொலி.

logo
Copyright @2024. All rights Reserved

  • Sona FM 107.8
    4/14, Reddipatty Road,
    Mamangam, Salem - 636302
  • Phone:
    (+91) 978 770 1078, (0427)234 1078
  • Email:
    info@sona.fm

Download Sona FM App

google-play google-play

CSR Project by

veetechnologies
play pause
  
Live
Sona FM 107.8 an initiative by the Valliappa Foundation