சேலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் வளர்ப்பு கூட்டம் மார்ச் 25 2025 அன்று நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, பூமி வெப்பமடைதலை தடுக்கும் முயற்சிகள், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் முன்னேற்பாடுகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வழிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பல்வேறு ஆலோசனைகளை முன்வைக்கும் வகையில் இந்த திறன் வளர்ப்புக் கூட்டம் சேலத்தில் உள்ள YMCA அரங்கில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- பூமி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துதல்: காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை குறைக்கும் நடைமுறைகள் குறித்து கலந்துரையாடல்.
- பிளாஸ்டிக் ஒழிப்பு: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைத்து, மாற்று வழிகளை அறிமுகப்படுத்தல்.
- ஏற்காட்டின் பசுமை பாதுகாப்பு: சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான ஏற்காட்டின் சுற்றுச்சூழல் தூய்மையைக் கடைப்பிடிக்கும் நடவடிக்கைகள்.
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கங்கள்: மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
சோனா FM 107.8, சமுதாய வானொலி இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒலிபரப்பி வருவதால் இந்த கருத்தரங்கில் பங்கேற்று தன் பங்களிப்பை வழங்கியது.
மேலும், பெரியார் பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் அபாய மேலாண்மை மைய இயக்குநர், Dr.பி. தங்கவேல், "உலகளாவிய காலநிலை மாற்ற சூழ்நிலை மற்றும் உயிரின அழிவில் அதன் தாக்கம்" என்ற தலைப்பில் விரிவாக உரையாற்றினார்.
மேலும், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின், உதவி திட்ட அலுவலர். உமாநந்தினி " CLEAN GREEN YERCAUD " என்ற தலைப்பில் "பிளாஸ்டிக் மூலம் ஏற்காட்டில் ஏற்படும் பாதிப்புகள்" பற்றி உரையாற்றினார்.
இந்த கூட்டம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு விழிப்புணர்வை வளர்க்கக்கூடிய வகையில் சமூகத்துக்கு பயனளிக்கும் தீர்வுகளை உருவாக்கவும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக அமைந்தது